230 வோல்ட் AC சிங்கிள் ஃபேஸ் மின்சப்ளையில் செயல்படுத்தும்படி அமைக்கப்பட்ட மோட்டாரை இது குறிக்கும். வீட்டில் உள்ள மோட்டார், மின்விசிறி, பம்ப், மாவு அரைக்கும் மெஷினில் உள்ள மோட்டார், ரெப்ரிஜிரேட்டர் மோட்டார் போன்றவை சிங்கிள் ஃபேஸ் இண்டஷன் மோட்டார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே!
3ஃபேஸ் மோட்டாரின் ஸ்டேட்டாருக்கு மின் சப்ளை வழங்கும் போது ஒரு சுழலும் காந்தப்புலம் ஏற்படுவதால் அதை விரட்டிக் கொண்டே ரோட்டார் என்ற சுழலும் பாகமும் சுற்றுகிறது. சிங்கிள் ஃபேஸ் வைண்டிங்கிள் சிங்கிள் ஃபேஸ் சப்ளை தரும் போது காந்தப்புலம் உண்டாகுமே தவிர சுழலும் காந்தப்புலம் ஏற்படாது.
எனவே சுழலும் பகுதியான ரோட்டாரானது தானே சுழலத் துவங்காது. அதை கையினால் சுழற்றி விடுவதன் மூலமோ அல்லது வேறு ஏதாவது வகையில் சுழலத் துவங்கும்படி செய்தாலோ, ரோட்டார் சுழலத் துவங்கி பின்பு சுழன்று கொண்டே இருக்கும். எனவே துவக்கச் சுழற்றுதிறன்தர தூண்டுகோல் தேவை.